தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்கள், சட்ட முன்வடிவுகளுக்கு எதிராக தி.மு.க. தலைமையிலான முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்ட முன் வடிவுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை மத்திய அரசின் நான்கு அம்சங்களுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28- ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், 2021- ஆம் ஆண்டு செப்டம்பர் 8- ஆம் தேதி அன்று இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் 2019- ஐ ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2021- ஆம் ஆண்டு செப்டம்பர் 13- ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்குக்கோரி சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 8- ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது, மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வை நடத்தும் முடிவைக் கைவிடக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.