சேலம் அருகே, சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 7 டன் வெள்ளைக்கற்களை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் அருகே உள்ள கருப்பூர் உப்பு கிணறு, ஊற்றோடை பகுதிகளில் இருந்து வெள்ளைக்கற்கள் கடத்திச் செல்லப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
உப்புகிணறு பகுதி வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் 7 டன் வெள்ளைக்கற்கள் சட்ட விரோதமாக கடத்திச் செல்வது தெரிய வந்தது. உடனடியாக வெள்ளைக் கற்களையும், லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரி, வெள்ளைக்கற்களை கருப்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் ஓமலூரைச் சேர்ந்த பெருமாள் (வயது 44) என்பதும், அவர் வெள்ளைக்கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்துச் சென்று மேட்டூரில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.