சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுப்பட்டவர்களின் வீடுகளை முற்றுகையிட்ட பெண்கள் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து சாலையில் உடைத்தனர்.
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே உள்ள திருநெல்லி காவல் கிராமத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்துவந்தனர். இதனால் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் குடிக்கு அடிமையாகி குடும்பங்களை சீரழித்துவருகின்றனர். இது குறித்து வடபாதிமங்கலம் காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என பலரிடமும் பொதுமக்களும் அப்பகுதி பெண்கள் பலமுறை புகார் அளித்தும் சட்டவிரோத மது விற்பனைக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்யும் இடங்களை முற்றுகையிட முடிவெடுத்து, ஒற்றுமையாக திரண்டுவந்து அனைத்து இடங்களிலும் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தரையில் போட்டு உடைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்ட விரோதமாக நடந்துவரும் மதுவிற்பனையை தடுத்து நிறுத்தப்படும், விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பல வாக்குறுதிகளை கொடுத்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு போலிசாரின் வாக்குறுதிக்கு மதிப்பளித்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறி, கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், "டாஸ்மாக் மதுபானக்கடையில் ரூ 115 விற்கப்படும் மது பாட்டில்களை சட்ட விரோதமாக வாங்கிவந்து அனுமதியின்றி 180 ரூபாய்க்கு விற்பனை செய்துவருகின்றனர். கரோனா காலத்திலும், மதுபானத்திற்கு அடிமையான ஆண்களும், இளைஞர்களும் குடித்துவிட்டு, வீட்டு செலவிற்கு கூட பணம் கொடுப்பதில்லை. கரோனா காலத்தில் பிழைக்கவே வழியில்லாமல் அவதிபடும் இந்தநிலையில், வேலையில்லாத இப்படிபட்ட சூழலில் அதிக விலை கொடுத்து மதுபாட்டில் வாங்கி குடித்துவிட்டு, குடும்பங்களை நிர்கதியாக்கி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சட்ட விரோத மதுவிற்பனையை காவல் துறையினர் கையூட்டுப்பெற்றுக்கொண்டு, கண்டு கொள்வதில்லை, இதனால் இந்த முடிவுக்கு வந்தோம், இனியும் கள்ள மது விற்பனைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் மிக பெரிய போரட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தனர்.