சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், மூடப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உரிமம் புதுப்பிக்கக் கோரி விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதை 15 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
உரிமம் புதுப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, 50 ஆயிரம் ரூபாயை வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என குடிநீர் ஆலைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், உரிமம் பெறும் ஆலைகள், தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளனவா? - அத்து மீறி செயல்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குடிநீர் ஆலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும்போது, அவற்றிற்கு எதிராகவும் ஆலை மூடல் அல்லது சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் அளவீடு செய்து அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.