தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் குழு ஒன்று தயாரித்துள்ள செயற்கைகோள் மூலம் இளையராஜாவின் இசை விண்ணில் பாய இருக்கிறது.
இந்தியாவின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் குழு ஒன்று எடை குறைவான செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளது. இஸ்ரோவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் விரைவில் விண்ணில் ஏவப்படவிருக்கிறது. இந்த செயற்கைகோள் உருவாக்கப்படும்போதே அதில் பாடல் இடம்பெறும் என அறிவித்திருந்தனர்.
அதில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடலை இடம்பெறச் செய்யலாம் என முடிவெடுத்த மாணவர் குழுவினர் அதற்காக இளையராஜாவிடமும் அனுமதி கேட்டிருந்தனர். இளையராஜாவும் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. விண்ணில் பாயப்போகும் அந்த செயற்கைக்கோளில் இடம்பெறும் பாடலை இளையராஜா சொந்த குரலில் பாடி இசையமைத்து விட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு இந்தி மட்டும் மராட்டியப் பாடலாசிரியர் சுவனந்த் கிர்கிரே வரிகள் எழுதியுள்ளார். இந்தியா கடந்த 75 ஆண்டுகளில் செய்த சாதனை, செய்யப்போக இருக்கின்ற சாதனை போன்றவை குறித்து பெருமைப்படுத்தும் வகையிலான வரிகள் அந்த பாடலில் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம் 75வது இந்திய சுதந்திர தின விழாவில் இளையராஜாவின் பாடல் விண்ணில் பாய இருப்பது தமிழர்களுக்கும், அவரது இசை ரசிகர்களுக்கும் பெருமிதத்தைத் தந்துள்ளது.