ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு இதயத் தமனி நோய் மற்றும் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈவிகேஎஸ் இளங்கோவன் வேகமாகக் குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளார் என்றும், தீவிரக் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.