செல்வாக்கால் கூடிய கூட்டம் அல்ல செல்வத்தால் கூடிய கூட்டம்: மாணிக்கம் எம்.எல்.ஏ,.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான மாணிக்கம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வந்தார். முன்னதாக டிடிவி தினகரன் அவரது குடும்பத்தினருடன் கோவிலுக்குள் சென்றதால் எம்.எல்.ஏ., மாணிக்கம் தினகரனை சந்தித்து பேசக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் தரிசனம் முடித்து கோவிலில் இருந்து வெளியே வந்த மாணிக்கம் எம்.எல்.ஏ,. செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காலை 10 மணிக்கு வந்தேன். அப்போது டி.டி.வி.தினகரன் கோவிலின் உள்ளே சாமி கும்பிட சென்றிருப்பதாக கூறினார்கள். நான் அவரை கோவிலில் சந்திக்கவில்லை. வாழ்நாளில் ஒருபோதும் அவரை சந்திக்க மாட்டேன்.
பிளவுபட்ட இயக்கம் ஒன்றுபட வேண்டுமானால் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து எடப்பாடி அணி முழுமையாக வெளியே வரவேண்டும். அப்போது தர்மயுத்தம் நடத்தி வரும் எங்கள் தலைவர் ஒ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்து செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். யாருக்கு என்ன பொறுப்பு என்பதை அவர் முடிவு செய்வார்.
மேலூரில் நேற்று கூடிய கூட்டம் தினகரன் செல்வாக்கால் கூடிய கூட்டம் அல்ல. அவரது செல்வத்தால் கூடிய கூட்டம். இது மக்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் ஜெ., காட்டிய வழியில் பயணித்து வருகிறோம். தவறான பாதையில் செல்பவர்கள் தான் திருந்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.