'தட்டு இருந்தால்தான் முட்டை கிடைக்கும்' என பிஞ்சு மாணவர்களிடம் சத்துணவு ஊழியர் கண்டிஷன் போட்டதால் மாணவர்கள் உணவின்றி தவித்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள புதுப்பாலப்பட்டு பகுதியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் மதிய உணவிற்காக வந்திருந்த நேரத்தில் சில மாணவர்கள் தட்டு இல்லாமல் வந்துள்ளனர். இதைப் பார்த்த சத்துணவு பெண் ஊழியர் தட்டு இல்லாமல் வந்ததால் முட்டையும் வழங்கப்பட மாட்டாது என அங்கிருந்த மாணவர்களை எச்சரித்தார். இதனால் மதிய நேரத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் பசி மயக்கத்தில் ஏக்கத்தோடு நின்றனர்.
இதனை வீடியோ எடுத்த பெற்றோர் ஒருவர் சத்துணவு ஊழியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அவரிடமும் சத்துணவு ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோவில் பேசும் சத்துணவு ஊழியர் ''தட்டு எடுத்துட்டு வாங்க தட்டு எடுத்துட்டு வாங்கன்னு டெய்லியும் தானே சொல்கிறேன்'' என மாணவ மாணவர்களை நோக்கி சொன்னார். அப்பொழுது பெற்றோர் ஒருவர் கேள்வி எழுப்ப, ''நீங்க பேசாதீங்க. நீங்கள் எதுவும் பேசுவதற்கு ரூல்ஸ் கிடையாது. உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேளுங்க. வீடியோவ எங்கு அனுப்பனுமோ அங்க அனுப்புங்க. நாங்க கேட்டா பதில் சொல்லிக்கிறோம். பசங்க கிட்ட எந்த கேள்வியும் கேட்கும் வேலை வெச்சுக்காதீங்க' என கூறியுள்ளார். அதற்கு வீடியோ எடுத்த நபர் 'என் பையனும் தான் இந்த ஸ்கூலில்தான் படிக்கிறான்' என தெரிவித்தார். இந்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.