திருச்சியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி "ஓபிஎஸ் கட்சித் தலைவர் ஆக விருப்பமில்லை என கூறுகிறார். பின் தலைமை கழகத்தின் உள்ளே புகுந்து அறைகளையும் கணினிகளையும் ஏன் உடைக்க வேண்டும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர், மாநில கழக எம்ஜிஆர் அணியின் செயலாளர் என்.ஆர்.சிவபதி அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கட்சியில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். என் நிலைப்பாடு அதுவல்ல தொண்டர்களின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடு. ஓபிஎஸ் முதலமைச்சர் ஆகவோ கட்சித் தலைவர் ஆகவோ விருப்பமில்லை எனக் கூறுகிறார். பின் ஏன் இவ்வளவு பிரச்சனைகளைச் செய்கிறார். பின் தலைமை கழகத்தின் உள்ளே புகுந்து அறைகளையும் கணினிகளையும் ஏன் உடைக்க வேண்டும்?
எட்டு வழிச் சாலை திட்டத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலத்தை கையகப்படுத்தித்தான் சாலையை அமைக்க முடியும். அப்பொழுது எதிர்த்தவர்கள் இப்பொழுது மௌனம் காக்கின்றனர். 10000 கோடி ரூபாயில் தமிழகத்திற்கு வரும் திட்டம் இவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. காவிரி குண்டாறு திட்டம். கிட்டத்தட்ட 14000 கோடி ரூபாயில் அந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். இப்போது அந்த திட்டத்தை புறக்கணிப்பது சரியல்ல" என கூறினார்.