வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற வரும் பொதுமக்கள் அவ்வலுவலகத்தில் நடத்தப்படும் 45 நிமிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்க வேண்டும். இந்த வகுப்பில் சாலை விபத்துக்கள் எதனால் ஏற்படுகிறது, சாலைவிதிகள் என்னன்ன? வாகனத்தில் வலது, இடது புறங்களில் திரும்பும்போது எந்த சிக்னல் செய்ய வேண்டும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த சாலை விபத்துக்களின் வீடியோ தொகுப்பு போன்றவை இங்கு வாய்மொழியாகவும், வீடியோ பதிவாகவும் வகுப்பில் கூறப்படுகின்றன.
அதில் பங்கேற்று சான்று பெற்றால் தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்ற நடைமுறை அமல்படுத்தியுள்ளனர். இந்த விழிப்புணர்வு வகுப்பு தமிழகத்திலேயே முதல்முறையாக வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதுப்போன்ற வகுப்புகள் ஓட்டுநர் பயிற்சி பெறும் பள்ளியில் எடுத்துரைப்பார்கள் என்பது குறிப்பிடதக்கது. பெரும்பாலான பயிற்சி பள்ளிகள் இதனை கற்றுதராமல் பணம் மட்டும்மே குறிக்கோளாக செயல்படுகின்றன. அதிகாரிகளும் இதுப்பற்றி பெரியளவில் அலட்டிக்கொள்ளாமல் வண்டி ஓட்டிக்காட்டினால் போதும் என்கிற நிலையில் சோதித்துவிட்டு லைசென்ஸ் வழங்கி வந்தனர்.
இதனால், இந்தியாவில் அதிக விபத்து நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அதில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்த விழிப்புணர்வு ஏற்பாட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இப்படிப்பட்ட விழிப்புணர்வுகள் ஓட்டுநர்களுக்கு கிடைப்பதன் மூலமாக விபத்துக்கள் குறையும் என கணக்கிடப்படுகிறது.