
‘மறுக்கப்படும் நீதி! பறிக்கப்படும் அநீதி! இந்துத்துவ பழிவாங்கலின் ஓராண்டு!’ என்ற ஆதங்கத்துடன், ஹத்ராஸ் சதி திட்டத்தால் கைது செய்யப்பட்ட மாணவ தலைவர்களை விடுதலை செய்யக்கோரி, மதுரையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்துக் கொண்டனர்.
மாணவ தலைவர்கள் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவால் சொல்லப்படுவோர், ஒரு வருடத்துக்கு முன் கைதான பின்னணி இது , "2020 செப்டம்பர் 14- ஆம் தேதி, உத்தரபிரதேசம், ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இளம்பெண் ஒருவர் ஆளானார். டெல்லி சாஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வாரங்களிலேயே, சிகிச்சை பலனின்றி அப்பெண் இறந்துவிட, உடலை வீட்டிற்கு கொண்டுபோக வேண்டும் என்று உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்காத போலீசார், நள்ளிரவில் மயானத்தில் வைத்து எரித்தது, அப்போது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டக் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக டெல்லியில் இருந்து ஹத்ராஸுக்கு பயணித்தபோது, மசூத் அகமத், அதிகுர் ரகுமான், ஆலம் மற்றும் பத்திரிக்கையாளர் சித்திக் ஆகிய நால்வரும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதானார்கள். அந்நால்வரிடமும் CFI அமைப்புடன் தொடர்புடைய புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் இருந்ததாக, காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.

கைதானவர்கள் தரப்பில், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குரலை வெளிப்படுத்தி, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்காகவே, ஹத்ராஸுக்கு பயணப்பட்டோம்.’ என்று கூறியதாக, காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியானது. உத்தரபிரதேச மாநில அரசு குறித்து தவறான கருத்துகளைப் பரப்பவும், சாதி மோதலைத் தூண்டவும், சதித்திட்டம் தீட்டியதாகவும், இதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவுடன் நால்வரும் தொடர்பில் இருந்ததாகவும், இதெல்லாம் விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும், அதனாலேயே தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவும், காவல்துறை தரப்பில் அப்போது விளக்கம் தரப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரைவிட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராட முனைந்தது குற்றச் செயலா? என்ற கேள்வியைத்தான், தற்போது மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் முன்வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் வைத்திருந்த பதாகைகளில் ‘சட்டத்தை நீதியின் வாயிலாக நிறைவேற்ற முடியாவிட்டால், கொடுமை தொடங்கும்!’ போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. ஓராண்டுக்கு முன் மாணவர்கள் கைது செய்யப்பட்டது பழிவாங்கலே என்பதில், இஸ்லாமிய அமைப்புகள் உறுதியாக இருப்பதால், போர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.