தேனி மாவட்டத்தில் நான்காவது 'மெகா கரோனா தடுப்பூசி முகாம்' மாவட்டம் முழுவதும் 225 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 50 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் கம்பத்தில் நடைபெற்ற முகாமை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ''கரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதன்மூலம் மூன்றாவது கரோனா அலையையும் தடுக்க முடியும்.அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டால் அண்டை மாவட்டத்தில் இருந்தும் கொண்டுவரப்படும்'' என்றார்.
அதன்பின்னர் தேனி-கேரளா எல்லையான குமுளி சோதனை சாவடிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் முறையாக தணிக்கை செய்யப்படுகிறதா என அதிகாரியிடம் கேட்டிருந்தார். மேலும் குமுளி பணிமனையை பஸ் நிலைய மாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் முரளிதரன். தேனி வடக்கு பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள், அதிகாரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.