Skip to main content

''பாரதியார் இருந்திருந்தால் 'இஸ்ரோ சிவனும், மயில்சாமி அண்ணாதுரையும் பிறந்த தமிழ்நாடு' என பாடியிருப்பார்''-முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

"If Bharatiyar had been around now, he would have sung 'Tamil Nadu, the birthplace of Isro Shiva and Maylaswamy Annadurai'" - Chief Minister M.K.Stalin

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது.

 

இந்த  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''தமிழ்நாட்டு அறிவியல் மேதைகள் ஒன்பது பேர் இந்த மேடையில் அமர்ந்திருப்பது என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு; புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு; வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு; நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு' என்று பாடிய மகாகவி பாரதியார் இப்பொழுது இருந்திருந்தால் 'இஸ்ரோ சிவனும், மயில்சாமி அண்ணாதுரையும் பிறந்த தமிழ்நாடு; நாராயணனும், சங்கரனும், ராஜராஜனும், ஆசீர் பாக்யராஜும், வனிதாவும், நிகர்ஷாஜியும், வீரமுத்துவேலும் பிறந்த தமிழ்நாடு' என பாராட்டிப் போற்றி இருப்பார்.

 

"If Bharatiyar had been around now, he would have sung 'Tamil Nadu, the birthplace of Isro Shiva and Maylaswamy Annadurai'" - Chief Minister M.K.Stalin

 

அந்த அளவிற்கு உலக நாடுகள் மத்தியில் இந்தியாவினுடைய பெருமையை உயர்த்திய தமிழர்களாக நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள். அந்த உயரத்தில் இருக்கக்கூடிய உங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் அழைத்துப் பாராட்ட வேண்டும் என நான் விரும்பினேன். என்னுடைய எண்ணத்தை ஏற்றுக்கொண்டு வருகை தந்திருக்க கூடிய எல்லோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 23ஆம் நாள் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே முக்கியமான நாள். நிலாவில் இந்தியா இறங்கிய நாள். சந்திராயன் விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கிய நாள். 1959 ஆம் ஆண்டு சோவியத் யூனியனும், 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2013 ஆம் ஆண்டு சீனாவில் தான் இந்த சாதனையைச் செய்திருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு நிலவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கியது. 2023 ஆம் ஆண்டு இந்த சாதனையை அடைந்திருக்கிறது. நிலவை தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பையும் இந்தியா அடைந்திருக்கிறது. இதுவரை அறியப்படாத நிலவின் தென் துருவப் பகுதியை சந்திராயன்-3 தரை இறங்கி ஆராயத் தொடங்கி உள்ளது. அந்த சந்திராயன் திட்டத்தின் இயக்குநராக இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்த அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த வீரமுத்துவேல்  செயல்படுத்திக் காட்டியது நமக்கெல்லாம் பெருமையிலும் பெருமை. இந்த 9 பேரில் 6 பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அதுதான் மிக மிக பெருமைக்குரிய ஒன்று'' என்றார்.

 

மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றையும் விடுத்தார். விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தார். தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் ஒன்பது பேரும் உழைப்புக்கான அங்கீகாரமாகக் கருதி இதனை  ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அதேபோல் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்