மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான அகல ரயில் பாதை திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துத் துறை முதன்மை அலுவலர்களுடன் தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார். தேனி மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டம் தொடர்பான பணி நடைபெற்று வருகிறது. இவற்றில் தற்சமயம் அகல ரயில் பாதை அமைப்பதற்கு, இடையூறாக இருக்கக் கூடிய அம்சங்கள் ஒவ்வொன்றாக சம்பந்தப்பட்ட துறைசார்ந்த முதன்மை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கேட்டறிந்தார்.
வனத்துறையின் மூலம் தேனி முதல் போடிநாயக்கனூர் வரையிலான பகுதியில் குறிப்பிட்ட மரங்களை அகற்றும் பணி மற்றும் மின்சாரத் துறையின் வாயிலாக மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலும், உசிலம்பட்டி முதல் போடிநாயக்கனூர் வரையிலும் உயர் மின்னழுத்த கோபுரங்களை மாற்றி அமைக்கும் பணிகள் வருவாய்த் துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே அவர்களின் தேவைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரால் மக்களவையில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
அதுபோல் மதுரை - போடி வரையிலான அகல ரயில்பாதை பணிகளை எம்.பி ரவீந்திரநாத்குமார் பார்வையிட்டார். அதன் அடிப்படையில், மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்தை விரிவாகச் செயல்படுத்த, தேவையான நிதி நிலை தொடர்பாக பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்து நிதிகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்.பி. ரவீந்திரநாத் குமார் கூட்டத்தில் தெரிவித்தார்.