நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.
ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.
இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.