திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது வீரளுர் கிராமம். இந்த கிராமத்தில் திமுக ஊராட்சி செயலாளராக இருப்பவர் காளியப்பன். 41 வயதான காளியப்பன், 7வது வரை மட்டும்மே படித்துள்ளார், ஊரில் விவசாயியாக உள்ளார். திமுக, உதயசூரியனை யாராவது தப்பா பேசிவிட்டால் மன்னிப்பு கேட்கும் வரை சண்டைப்போடுவார், அந்தளவுக்கு தீவிர விசுவாசி.
கலசப்பாக்கம் தொகுதியில் ஒருக்காலத்தில் திமுகவின் கோட்டையாக இருந்தது. அதிமுகவின் முதல்வராக இருந்த எம்.ஜீ.ராமச்சந்திரனை சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பி திக்கு முக்காடவைத்த பெ.சு.திருவேங்கடம் நின்று தொடர்ச்சியாக வெற்றிபெற்ற தொகுதியிது. 2001 முதல் இந்த தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னமே வெற்றிபெற்று வருகிறது.
2001 - 2006ல் அதிமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரன், 2006 – 2011 வரை அதிமுக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, 2011 – 2016 வரை மீண்டும் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, 2016 முதல் தற்போது வரை அதிமுக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். கடந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களாக திமுக இந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடவில்லை.
கடந்த 2001 சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியை சந்தித்தார். 2006ல் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது, 2011, 2016 தேர்தல்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டு எதிர்த்து நின்ற அதிமுகவே வெற்றி பெற்றது.
2011 சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியின்போது அதிமுகவினர், திமுகவினரை கிண்டல் செய்து, நீங்க ஜெயிக்க முடியாது என நக்கலடித்துள்ளனர். வீரளுர் பகுதி அதிமுகவினரும் திமுகவினரை கிண்டல் செய்துள்ளனர். திமுக கிளை செயலாளர் காளியப்பன், தன்மானத்தோடு, இந்த கலசப்பாக்கம் தொகுதியில் திமுகவை சேர்ந்த ஒருவர் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏவாகும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம்மெடுத்து கடந்த 9 வருடமாக செருப்பு போடாமல் நடந்து வருகிறார்.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் கோட்டை எனப்படும் கலசப்பாக்கத்தில் திமுக வெற்றி சேர்மனாக திமுகவை சேர்ந்த ஒரு பெண்மணி பதவியில் உள்ளார். துணை தலைவராகவும் திமுகவை சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக மெஜாரிட்டியாக இருந்த நிலையில் திமுக தேர்தல் பொறுப்பாளர் கம்பன் முயற்சியால் திமுக வெற்றி பெற்றுள்ளது. கலசப்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார் காளியப்பன். அவர் வெற்றி பெற்ற நிலையிலும் தற்போதும் காலில் செருப்பு அணியாமலே நடந்து வருகிறார்.
இதுப்பற்றி அவரிடம் பேசியபோது, இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டு உதயசூரியனை மக்கள் வெற்றி பெற வைக்கும் வரை செருப்பு அணியமாட்டேன் என்றார்.