முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடந்த 11ம் தேதி தனது 70வது பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால் மாவட்டத்தில் உள்ள விச்சுவின் ஆதரவாளர்களும், கட்சிப் பொறுப்பாளர்களும் சிட்டிங் அமைச்சராக விசுவநாதன் இருந்தால் எந்த அளவுக்கு விளம்பரம் செய்வார்களோ அதுபோல் பிளக்ஸ் பேனர், போஸ்டர், தினசரி பேப்பர்களில் விளம்பரம் கொடுத்தனர். அதோடு இல்லாமல் கோவிலில் தங்கத்தேர் இழுத்தும், விச்சுவின் பெயரில் சிலர் சிறப்பு பூஜைகளையும் நடத்தினார்கள். அந்த அளவுக்கு முன்னாள் அமைச்சராக விசுவநாதன் இருந்தும்கூட மாவட்ட அளவில் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்துவருகிறது.
இந்த நிலையில்தான் டிடிவியின் தீவிர ஆதரவாளரான கரூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திடீரென திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான நத்தம் விசுவநாதன் திமுகவுக்கு போகயிருப்பதாகவும் இணையதளங்களில் திடீரென செய்தி பரவியது. இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது சம்மந்தமாக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான நத்தம் விசுவநாதனிடம் கேட்டபோது... என்னுடைய அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் எதிரிகள்தான் இப்படி என்னைப் பற்றி அப்படியொரு தவறான புரளியை பரப்பி வருகிறார்கள். அது யார் என எனக்கு தெரியும். நேரம் வரும்போது மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்துகிறேன். என்னுடைய சுயமரியாதையை விற்று அந்த ஈன பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கி விடலாம். நான் ஒருபோதும் திமுகவுக்கு போகமாட்டேன். அந்த பேச்சுக்கே இடமில்லை. இதைப்பற்றி நான் பேசவே எனக்கு அசிங்கமாக இருக்கிறது. நான் எப்பொழுதும் புரட்சித்தலைவர் உருவாக்கி, அம்மா வளர்த்த அதிமுகவில்தான் தொடர்ந்து இருப்பேனே தவிர இப்படிப்பட்ட வதந்திகளை கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் இதை நம்பவேண்டாம் என்று கூறினார்.