
குட்டத்துப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ. சிஸ்டத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்துவைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், குட்டத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள இந்த மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய செல்வி சுதாமேரி நிதியில் சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ. பிளான்ட் சிஸ்டம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு குட்டத்துப்பட்டி பங்குத் தந்தை ஜான் நெப்போலியன் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் லெட்சுமிகாந்த பாரதி வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சியர் விசாகன், திட்ட இயக்குநர் தினேஷ் குமார், ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, துணைப் பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.ஓ. சிஸ்டம் பிளான்டை துவக்கிவைத்த அமைச்சர் ஐ. பெரியசாமி நிகழ்ச்சியில் பேசியதாவது, “கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துவரும் இந்த காலத்தில், இந்தப் பள்ளியில் மட்டும் சுமார் 700 பேர் படிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதற்குக் காரணம் அங்குள்ள ஆசிரியர்களின் அயராத உழைப்பே.

ஆரம்பத்தில் இப்பள்ளி தொடக்கப்பள்ளியாக இருந்த காலம்முதல் படிப்படியாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்துள்ளது. பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மற்றும் எம்.பி. நிதி உட்பட பல்வேறு நிதிகளை வழங்கியதால் இன்று பள்ளியில் சிறப்பான வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள் அமைந்துள்ளன; மாணவர்களும் சிரமமின்றி கல்வி கற்க முடிகிறது. இவ்வருடமும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பகுதியை ஒதுக்கி பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவேன்” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தண்டபானி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, அண்ணாதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.