தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய் பரவி வரும் வேளையில், மத்திய மாநில அரசுகள் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அவர்களுக்கு எந்தவித பொருட்களும் முழுமையாக சென்றடையவில்லை. இதை கருத்தில் கொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கரோனா தடுப்பு நடவடிக்கையில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என கட்சியினரை கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில்தான் திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நிவாரண பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதுபோல் தனது ஆத்தூர் தொகுதியான ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 24 பஞ்சாயத்துகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு முகவசம், கிருமி நாசினி, சோப்பு மற்றும் ஹேண்ட் வாஷ் ஆகிய பொருட்களையும் வழங்கியுள்ளார்.
இவ்விழாவிற்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியோ பத்து லட்சம் பெருமான சோப்பு, முககவசம் மற்றும் கிருமிநாசினி மருந்துகளை அப்பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கொடுத்து அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கொடுக்கச் சொன்னார்.
அதுபோல் அனைத்து கிராமங்களிலும் துப்புரவு பணிகளை சிறப்பாக செய்து துப்புரவு பணியாளர்களுக்கும் முககவசம் கிருமிநாசினி மற்றும் ஹேண்ட்வாஸ்களை வழங்கினார். இதில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து இடைவெளி விட்டு நின்று வாங்கிச் சென்றனர்.
இந்தவிழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெகன், ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, பண்ணப்பட்டி ஜெகநாதன், ரெட்டியார்சத்திரம் அன்பரசு, பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகராஜா, மாவட்ட பிரதிநிதி கன்னிவாடி இளங்கோ, ஊராட்சி மன்றத் தலைவர்கள் புதுப்பட்டி அருணாச்சலம், கொத்தபுள்ளி சுமதி அன்பரசு, நீலமலைக்கோட்டை சின்னுமுருகன், குருநாதனாயகனூர் பழனிச்சாமி, அம்மாபட்டி இராமச்சந்திரன் மற்றும் தாதன்கோட்டை ஆறுமுகம் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.