தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பதிவில் ‘திமுகவின் ஃபைல்கள்’ எனக் குறிப்பிட்டு ‘ஏப்ரல் 14, 2023 - காலை 10:15’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் பதிவிட்ட காணொளியில் திமுகவின் முக்கிய தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்டார். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவை சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்துமதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். செய்தியாளர்கள் மைக்கை நீட்டிய உடன் ''நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு தெரியும்'' என சிரித்தார். மானிய கோரிக்கைகள் குறித்து கேள்விக்கு பதிலளித்துப் பேசிய உதயநிதி, ''நேற்றே ஜி.ஓ போட்டாச்சு. 10 விளையாட்டு அரங்கங்கள் எந்தெந்த ஊரில் அமைக்கப்படுவது என்பது தொடர்பான வேலைகளுக்கான பணிகள் துவங்கி ஆகிவிட்டது'' என்றார். அண்ணாமலை வெளியிட்ட திமுக ஊழல் பட்டியல் பற்றிய கேள்விக்கு ''அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அதற்குத்தான் காலையில் அமைப்புச் செயலாளர் பதில் சொல்லிவிட்டாரே'' என்றார்.