கடலூர் மாவட்டம், பெண்ணாடம் இருளர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மனைவி லட்சுமி (50). கட்டட தொழிலாளியான இவர், நேற்று (13.09.2021) காலை பெண்ணாடத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் செயல்பட்டுவரும் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடுவதற்காக சென்றுள்ளார். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தடுப்பூசி போடுவதற்காக செவிலியரிடம் சென்று காத்திருந்தார். அப்போது செவிலியர் மற்றொருவரிடம் பேசிக்கொண்டே முதல் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.
பின்னர் மீண்டும் அதே பெண்மணிக்கு செவிலியர் 2வது முறையாக தடுப்பூசியை செலுத்தும்போது, தனக்கு ஊசி போட்டுவிட்டதாக கூறியும், அதைக் காதில் வாங்காமல் தடுப்பூசியை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் ஐயப்பன் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு ஒரு ஊசி மட்டுமே செலுத்தியதாக செவிலியரும், மருத்துவரும் தெரிவித்தனர். ஆனால் ஊசியை செலுத்திக்கொண்ட லட்சுமி, தனக்கு இரண்டுமுறை தடுப்பூசி செலுத்தப்பட்டது என கையில் போடப்பட்ட ஊசியின் தழும்பைக் காட்டி விளக்கினார்.
அதையடுத்து 2 முறை தடுப்பூசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் லட்சுமிக்கு தலைமை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவத்தால் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த சில பயனாளிகள், அச்சத்துடனே தடுப்பூசியை செலுத்திக்கொண்டு திரும்பிச் சென்றனர். அதேசமயம், இதுகுறித்து கூறிய மருத்துவர்கள், “2 முறை தடுப்பூசி போட்டிருந்தாலும் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனாலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவோம்” என்றனர். இதனால் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.