Skip to main content

"குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்"- தி.மு.க.வினரால் வருத்தப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

"I feel short of guilt" - Chief Minister MK Stalin upset by DMK!

 

தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வினர் பொறுப்பைவிட்டு விலக தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது. 

 

இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

 

இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.

 

அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில்  சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.

 

பேரறிஞர் அண்ணா சொன்ன "கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்"  மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டப் பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கட்சித் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

 

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

 

கட்சித் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கட்சித் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

 

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கட்சியின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்