இன்று ஜூன் 12 ஆம் தேதி, மேட்டூர் அணையில் நீர்ப்பாசனத்திற்காகத் தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “நான் கேட்ட எந்த கேள்விக்கும் அமித்ஷா பதில் சொல்லவில்லை. தமிழர் ஒருவரை பிரதமராக்குவோம் என சொல்லியிருப்பது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மீது என்ன கோபமோ தெரியவில்லை. 2024 ஆம் ஆண்டு பாஜகவினுடைய பிரதமர் வேட்பாளராக தமிழர்கள் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை இருக்கிறார்கள்; முருகன் இருக்கிறார்; ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் பேசியது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''இங்கு தமிழ்நாட்டில், சென்னையில் பிறந்த ஒருவர் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். அவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி ஐயா. பாஜகவில் பல தமிழர்கள் உச்சகட்டமாக பல பொறுப்புகளுக்கு போயிருக்கிறார்கள். அமித்ஷாவின் பேச்சில் ஒரு பூத் தலைவர் கூட பாஜகவில் உயரிய இடத்திற்கு செல்லலாம் என சொல்லியிருந்தார். 1982ல் குஜராத்தில் ஒரு பூத் தலைவராக இருந்த நான் 2023ல் பாஜகவில் உயரிய பதவிக்கு வந்து இன்று உள்துறை அமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.
நம்ம கட்சியில் மட்டும்தான் எந்த பொறுப்புக்கும் செல்ல முடியும் என சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏன் அவசரப்படுகிறார் என்று தெரியவில்லை. நான்கு நாட்களாக ரொம்ப அவசரப்பட்டு கொண்டிருக்கிறார். முதலமைச்சருக்கே பயம். அவரை தாண்டி அவரது சகோதரி கனிமொழி தலைவராக வருவதற்கு தயாராகிவிட்டார். கட்சியே கனிமொழியை நோக்கி செல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் அமித்ஷா நேற்று சொன்ன மாதிரி 3ஜி (3 ஆவது ஜெனரேஷன்) ஆக உதயநிதியை கொண்டு வந்து துணை முதல்வர் பதவியை கொடுக்க நினைக்கிறார்கள்'' என்றார்.