“நான் பாஜகவில் சேர உள்ளதாக வேண்டுமென்றே சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர். அது உண்மை அல்ல” எனப் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார்.
மேலும் அவர் நம்மிடம் இது தொடர்பாகப் பேசுகையில், ''நான் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளதாக வேண்டும் என்றே யாரோ சிலர் இவ்வாறு தவறான தகவலைப் பரப்புகின்றனர். அதிமுகவிலிருந்து திமுகவில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நான் சேர்ந்தேன். எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி கட்சியில் பணியாற்றுகிறேன். பதவிக்காக நான் கட்சியில் சேரவில்லை. எந்தப் பதவியையும் நான் கேட்கவில்லை. என்னை விட பல்லாண்டுகளாக திமுகவில் பணியாற்றுபவர்கள் இருக்கிறார்கள். எனவே பதவி கொடுங்கள் என்று நான் கூற முடியாது.
என்னைப் போன்றே தேர்தலுக்குப் பிறகு திமுகவில் சேர்ந்து சிலர் பதவியைப் பெற்று இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். அமைச்சராக ,எம்எல்ஏவாக இருந்தபோது கூட எனது தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணியாற்றினேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு சுமார் 10,000 வாக்குகளைப் பெற்றுள்ளேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதிகாரிகளைக் கூட கேட்கலாம் நான் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நான் முன்னுரிமை அளித்து வந்துள்ளேன் என்று அவர்கள் கூறுவார்கள்.
முதல்வர், அமைச்சர்கள், திமுக தலைமை மற்றும் பொறுப்பாளர்களிடம் நான் நல்ல உறவுடன் இருக்கிறேன். நட்பு ரீதியாக பல்வேறு கட்சியின் நண்பர்கள் பழகி வருகின்றனர். அதேபோன்று தான் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் பழகுகின்றனர். அவர்கள் கட்சியில் சேரச் சொல்லி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. திமுக கொள்கைகளில் சில முரண்பாடுகள் எனக்கு இருந்தபோதிலும் திமுகவில் உறுதியுடன் இருக்கிறேன். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்தேன். உள்ளூர் திமுக பிரமுகர்களுடன் நட்புடன் இருக்கிறேன். ஆனால் எங்கிருந்து வதந்தி கிளப்பப்பட்டது என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை எனது தொகுதி மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் " என்றார்.