கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்பொழுது துவங்கியது. எப்பொழுதும் இசைத்தட்டு மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்படும் நிலையில், இந்த முறை நேரடியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழக அரசின் இசைக்கல்லூரி பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர்.
புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை துவங்கினார். அப்பொழுது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் மற்றும் விசிக எம்.எல்.ஏக்கள் ஆளூர் ஷநவாஸ், சிந்தனை செல்வன், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ''உருமாறிய கரோனா வைரஸின் சவால்களை எதிர்கொள்வதற்கு அரசு முழுமையாக தயாராக உள்ளது. கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணியை மக்கள் இயக்கமாக மாற்றி கரோனா இரண்டாம் அலையை திறம்பட கையாண்ட தமிழக முதல்வரை பாராட்டுகிறேன்.
மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி ஆக்சிஜன் மருந்துகள் கிடைப்பதை முதல்வர் உறுதி செய்துள்ளார். கரோனா நிவாரண நிதிக்கு 543 கோடி ரூபாயில் 541.64 கோடி ரூபாய் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களையும் மறுசீரமைக்கத் தேசிய பேரிடர் நிவாரண நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவு நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் இதுவரை 42.99 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் இதுவரை 4,482 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடர்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது ''என்றார்.