தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (7.8.2023) சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பொறியியல் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள திறன் சாதனை கண்காட்சியைத் திறந்து வைத்தார். மேலும் ‘நான் முதல்வன்’ திட்டத்தை பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விரிவுபடுத்தி, நான் முதல்வன் ஹேக்கத்தான் இணைய தளம், காலணி உற்பத்தி தொழில்நுட்பம், ஆயத்த ஆடை உற்பத்தி, சரக்கு நகர்வு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் ஒரு புதிய இளங்கலை தொழிற்கல்வி பட்டப்படிப்பு, கலைஞர் நூற்றாண்டு இணையதளம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் குடிமைப் பணி போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “தமிழ்நாட்டு இளைஞர்களை உலகத்திலேயே முதன்மையானவர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தணியாத ஆசை. சில திட்டங்கள், அப்போதைய தேவையை நிறைவு செய்வதாக இருக்கும். சில திட்டங்கள் ஓராண்டுக்குப் பயன் தருவதாக இருக்கும். ஆனால், நான் முதல்வன் போன்ற திட்டங்கள்தான் தலைமுறை தலைமுறைக்குப் பயன்படுகின்ற திட்டங்கள். இந்த திட்டத்தை அறிவிக்கும்போது இதை முறையாக நடத்திக் காட்டவேண்டும். இதனுடைய நோக்கத்தை முழுமையாக அடைகின்ற வகையில் நடத்த வேண்டும் என்று நான் உறுதி எடுத்துக் கொண்டேன். அறிவிப்பு செய்வதுடன் எந்தத் திட்டமும் முழுமை அடைந்துவிடாது. அதைக் கடைசி வரை நடத்திக் காட்டுவதில்தான் அதனுடைய வெற்றி அடங்கியிருக்கிறது என்று அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் சொல்லக்கூடியவன் நான்.
அந்த வகையில் நான் முதல்வன் திட்டம் ஓராண்டை நிறைவு செய்கிறது. நெஞ்சில் நிறைவும், முகத்தில் மகிழ்ச்சியும் பொங்க, நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். உலகை வெல்லும் இளைய தமிழ்நாட்டை உருவாக்குகின்ற நான் முதல்வன் திட்டத்துடன் வெற்றிச் செய்தியை சொல்வதற்காகத்தான் இந்த விழா நடைபெறுகிறது. இதற்குக் காரணமான இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். விளையாட்டுத் துறையில் எப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்கி வருகிறாரோ, அதே மாதிரி நான் முதல்வன் திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறார்.
ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி என்றுதான் முதலில் இலக்கு நிர்ணயித்தோம். முதல் வருடத்திலேயே, 13 லட்சம் மாணவர்களுக்கு உயர் தரத்தில் திறன் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்தத் திட்டத்தினுடைய மிகப்பெரிய சாதனை. இப்படி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மிகச் சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கிறது என்பது அடுத்த சாதனையாகும்” எனப் பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சி.வி. கணேசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.