பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
அதேநேரம் அரசியல் கட்சிகளின் கூட்டணி காய் நகர்த்தலில் ஏற்படும் அதிருப்தி காரணமாக சிலர் தான் பயணித்த அரசியல் கட்சிகளிலிருந்து மற்றொரு கட்சிகளுக்கு தாவும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடும் என காத்திருந்த அக்கட்சியின் தொண்டர்கள் சிலருக்கு தேர்தலில் இருந்து மக்கள் நீதி மய்யம் விலகியது அதிருப்தியை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திக்காமல் திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட்டு ஒன்றை வாங்கி விட்ட நிலையில் இது கட்சிக்குள் பல்வேறு புகைச்சல்களை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை சந்திக்காமல் விலகுவது கட்சியினுடைய வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கும் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அனுஷ்கா ரவி மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளதோடு அவர் பாஜகவிலும் இணைந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் அரசியலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து மிக மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்' என தெரிவித்துள்ளார்.