திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், தன்னை ஆபாசமாகப் படம் பிடித்து தனது கணவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றப் போவதாக மிரட்டுகிறார் என பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் புலன் விசாரணை முடிந்து கரூரைச் சேர்ந்த தேவ் ஆனந்த் மீது 20.09.2018 ஆம் தேதி ஏற்கனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் திருச்சி ஜே.எம் இரண்டு நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி தலைமையில் நேற்று முன்தினம்(10.04.2023) விசாரணை மேற்கொண்டதில் தேவ் ஆனந்துக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, ஏக காலத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கினை புலன் விசாரணை செய்து குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த கண்ட்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தி வேதவல்லி மற்றும் புலன் விசாரணையில் உறுதுணையாக இருந்த காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா நேரில் அழைத்துப் பாராட்டினார்.