கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த கோ.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்-வாசுகி என்பவரின் மகன் மணிராஜ். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த மதியழகன் - நிர்மலா ராணி என்பவரின் மகள் ஷர்மிளாபானுவை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதலித்து திருமணம் செய்து மனைவியுடன் வாழ்ந்து வந்த மணிராஜிக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் காதலித்து திருமணம் செய்த நாள் முதல் மணிராஜ், சர்மிளா பானு மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தகராறில் ஈடுபடும்போது சர்மிளா பானு பலமுறை கோபப்பட்டு, தன் தாய் வீட்டிற்குச் செல்வதும், பின்னர் சமாதானம் செய்து வைத்து, கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, பின்னர் சமாதானம் செய்து கணவருடன் வசித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மணிராஜ் அதிக மதுபோதையில் மீண்டும் தனது காதல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற மணிராஜ், நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டது அக்கிராமத்தையே உலுக்கியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கக்கூடிய தனது மனைவியின் ஆடைகளைக் களைத்துவிட்டு, அவரின் கை, கால்களைக் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்து, அவரின் பிறப்புறுப்பைச் சிதைத்துள்ளார். இதனால் நிலைகுலைந்து போன அப்பெண், ரத்தவெள்ளத்தில் சுயநினைவு இழந்து வீட்டிற்குள் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த மணிராஜின் தாயார் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கே சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் அப்பெண்ணின் பிறப்பு உறுப்பில் 25 தையல்கள் போடப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கொடுமையான வலியால், தாங்க முடியாத அவதியடைந்து மயக்கம் அடைந்ததால் மீண்டும் அவசர ஊர்தி மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கக் கூடாது என அப்பெண்ணை மிரட்டியதாகவும், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய பின்பே அப்பெண்ணின் பெற்றோர்களுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மணிராஜ் தலைமறைவாகிவிட்டார்.