நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் நாளை அல்லது நாளை மறுதினம் வீடு திரும்புவார் என அவரை சந்தித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.
அண்மையில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் மருத்துவமனையில் இளங்கோவனை சந்தித்த பின் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிவராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் வெற்றிக்குப் பின் டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்தித்து இன்று (நேற்று 15/03/2023) மாலை 4.30 மணியளவில் சென்னைக்கு திரும்பினார். அவருக்கு சாதாரண நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். வழக்கமான பரிசோதனைகள் செய்ய இருப்பதன் காரணமாக அவரை ஒரு நாள் மருத்துவமனையில் வைத்து பரிசோதனைகள் செய்யப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அவரை நேரிடையாக நாங்கள் சந்தித்து பேசினோம். நன்றாகப் பேசுகிறார். அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. நாளை அல்லது நாளை மறுதினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்” எனக் கூறினார்.