தலைமறைவாக இருந்துவந்த முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் இன்று கர்நாடகா மாநிலத்தில் கைது செய்துள்ளனர்.
ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3 கோடியை பெற்றுக்கொண்டு பண மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார், அது தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். தலைமறைவான ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அத்தனிப்படைகள் ராஜேந்திர பாலாஜியை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த சூழ்நிலையில், தர்மபுரியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் ஓட்டுநரான ஆறுமுகம் மற்றும் அமைச்சரின் பினாமியான பொன்னுவேல் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜேந்திர பாலாஜியை தர்மபுரியில் இருந்து பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவலை முன்வைத்து கோவை ஐ.ஜி. தலைமையிலான தனிப்படை போலீசார் தன்னுடைய விசாரனையை மேற்கொண்டனர்.
தர்மபுரியில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து டெல்லிக்கு செல்ல இருந்த நிலையில், அந்த பிளான் மாற்றம் செய்யப்பட்டு, ஒசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள சானவாவு கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ராஜேந்திர பாலாஜி தங்கியிருந்துள்ளார்.
இதனை கண்டறிந்து போலீஸார், அந்த இடத்திற்கு விரைந்தனர். மேலும், அடுத்த ராஜேந்திர பாலாஜி எங்கச் செல்லவிருக்கிறார் என்பதை அவருடன் இருந்த ராமகிருஷ்ணன் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தனர். ராஜேந்திர பாலாஜியும் அடுத்தடுத்து இடத்தை மாற்றிக்கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில், ராமகிருஷ்ணன் உறவினரான அனிஷா என்பவரின் உதவியுடன் கர்நாடகா மாநிலம் சிப்பிலபூர்க்கு பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து மங்களூரு பக்கமுள்ள ஹசன் என்று இடத்தில் பி.ஜே.பி. நண்பர்களுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோவை ஐ.ஜி. சுதாகர், தனிப்படை போலீஸார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவருடன் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜி ஹசன் நீதிமந்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன்பிறகு தமிழகத்திற்கு அழைத்துவரப்படுவார் எனச் சொல்லப்படுகிறது.