புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை கிராமமான கோபாலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜகுபர் சாதிக் வெளிநாட்டில் பல்பொருள் அங்காடி நடத்தி வரும் நிலையில் குடும்பத்தினரும் வெளிநாட்டில் உள்ளனர்.
தனது வீட்டை தனது சகோதரியிடம் பார்த்துக் கொள்ளச் சொன்னதால் அவரது சகோதரி கவனித்து வந்தார். சில நாட்கள் வெளியூர் திரும்பி வந்த போது ஜகுபர் சாதிக் வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு சுமார் 750 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் திருடு போனதாகப் புகார் கொடுக்கப்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேரில் ஆய்வு செய்து 3 தனிப்படைகளையும் அமைத்தார்.
இந்தநிலையில் இன்று திருடுபோன வீட்டின் பின்பக்கம் உள்ள உறைகிணற்றின் பாதுகாப்பு தடுப்பு விலகி இருப்பதால் நகைகள் அங்கே கிடக்கலாம் என்று சிலர் சந்தேகம் கிளப்ப உடனே தண்ணீர் இறைக்கப்பட்டு சோதனை செய்தபோது தங்க நகைகள் ஒரு பாலிதீன் கவரில் இருந்து மீட்கப்பட்டது. அதில் 559 பவுன் நகை இருந்தது உறுதி செய்யப்பட்டது.
போலீசார் தீவிரமாகத் தேடுவதை அறிந்த திருடர்கள் சம்பவம் நடந்த வீட்டு கிணற்றிலேயே நகைகளைப் போட்டு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் திருடர்களாகவோ, உளவாளிகளாகவோ இருக்கலாம் என்கின்றனர்.