தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டத்துறை, நகர்ப்புற வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை அவை தொடங்கியது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இதுவரை குடிசை மாற்று வாரியம் என்று அழைக்கப்பட்டு வந்ததை தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இத்துறையின் கீழ் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் சுமார் 950 கோடி செலவில் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட இருப்பதாக அறிவித்தார். நெல்லை, தஞ்சை, மதுரை, சிவகங்கை, தென்காசி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இந்த குடியிருப்புகள் கட்டப்பட இருக்கிறது. மேலும், சட்டத்துறை சார்பாக சில அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, பழமையாக புழக்கத்தில் இல்லாத 69 சட்டங்கள் நீக்கப்படும் எனத் தெரிவித்தார்.