அனைவரும் குரல் பதிவுகளை வெளியிடும் 'hoote' என்ற சமூக வலைதள செயலியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று (26/10/2021) தொடங்கி வைத்தார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த செயலி 60 வினாடி அளவு ஆடியோவைப் பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'தாதா சாகேப் பால்கே' விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.
எவர் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில், 'hoote' செயலியை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரை இன்று (27/10/2021) நேரில் சந்தித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், 'hoote' செயலி குறித்து முதலமைச்சருக்கு விவரித்தார். அதைத்தொடர்ந்து, வாழ்த்தும் பெற்றார்.