திருச்சி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து செந்தண்ணீர்புரத்திற்கு அரசு நகர பேருந்து நேற்று இயக்கப்பட்டது. பாலக்கரை பகுதியைச் சேர்ந்த வடிவேல்(40) என்பவர் பேருந்து ஓட்டுநராகவும், தாராநல்லுாரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நடத்துநராகவும் பணியில் இருந்தனர்.
அந்த பேருந்து சிங்காரத்தோப்பை தாண்டி சென்று கொண்டிருந்த போது, பெண்கள் அமரும் இடத்தில் சீட்டுக்கு கீழாக தங்கச் சங்கிலி கிடந்ததை நடத்துநர் பார்த்துள்ளார். அவர் அதனை எடுத்து, யாருடைய செயின் என பேருந்தில் பயணித்தவர்களிடம் விசாரித்துள்ளார். ஆனால், யாரும் உரிமை கோரவில்லை. இதனைத் தொடர்ந்து பேருந்து காந்தி மார்க்கெட் காவல்நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
ஓட்டுநரும், நடத்துநரும் தங்க சங்கிலியை காந்தி மார்க்கெட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த தங்கசங்கிலி 4 பவுன் என்பது தெரிய வந்துள்ளது. அரசு பேருந்து ஊழியர்களின் நேர்மையான செயலை காவல்துறையினரும், பொதுமக்களும் பாராட்டிவருகின்றனர்.