கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு நர்சிங் கல்லூரி மாணவ – மாணவிகளின் உதவியைக் கேட்டு வாங்கியுள்ளது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம். திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு தனியார் செவிலியர் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 4 ஆம் ஆண்டு படித்துவரும் மாணவ – மாணவிகளிடம், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களை பரிசோதனை செய்ய உதவ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சார்பில் கேட்கப்பட்டது.
இதில் மனமுவந்து இந்த சேவை பணிக்காக 69 மாணவ – மாணவிகள் வருகை தந்துள்ளனர். இவர்கர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களுக்கும் முதல் கட்டமாக, குழு குழுவாக பிரித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான பேருந்து வசதி, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தந்து இவர்களோடு மருத்துவர்களும் செல்வார்கள்.
இவர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று பொதுமக்களின் உடலை பரிசோதனை செய்துக்கொண்டு வருவார்கள். இந்த 4 ஒன்றியங்கள் முடிந்ததும் மீதியுள்ள மற்ற ஒன்றியங்களுக்கு செல்வார்கள் என்றும், மாவட்டத்தில் உள்ள ஏறக்குறைய 27 லட்சம் பொதுமக்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளோம் என ஏப்ரல் 4ந்தேதி தெரிவித்தார்.
சில தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்க முடிவு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளும் கரோனா சிறப்பு வார்டாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.