கோப்புக்காட்சி
திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற மீனாட்சி, விருதுநகரிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியபோது, அதிர்ச்சி காத்திருந்தது.
அப்படியென்ன நடந்தது?
விருதுநகர் மாடர்ன் நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவருடைய கணவர் மனோகரன், கனடாவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். மீனாட்சி தனது வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர்கள் லதா மற்றும் சரஸ்வதி ஆகியோரோடு, 10-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கெல்லாம் திருச்செந்தூர் சென்றார். அங்கு முருகனைத் தரிசித்துவிட்டு, அன்றிரவே விருதுநகர் திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்கப் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியானார். உடனே, விருதுநகர் – சூலக்கரை காவல்நிலையத்தில் அவர் புகாரளிக்க, சம்பவ இடத்துக்கு வந்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
காவல்துறையின் விசாரணையில், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 30 சவரன் நகை மற்றும் ரூ.44000 ரொக்கம் கொள்ளை போனது தெரிந்தது. வழக்கு பதிவு செய்த சூலக்கரை காவல் நிலைய போலீசார், கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.