வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் இன்னும் தீவிரமடைந்து 23ஆம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று திசை வேகத்தைப் பொறுத்து இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'டானா' எனப் பெயர் வைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கத்தார் நாட்டின் பரிந்துரையின் பேரில் இந்த புயலுக்கு 'டானா' எனப் பெயர் வைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தகைய சூழலில் தான் தொடர் கனமழை காரணமாகக் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (23.10.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாகத் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (23.10.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.