சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடியை ஏற்றுவதில் சாதியப் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.
சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு தேசியக் கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு சில ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக, தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளோ, அவமதிக்கும் செயல்களோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தீண்டாமையை எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பட்டியல் இனத்தோர் பழங்குடியின ஊராட்சித் தலைவர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதை அவமதித்தால், அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு எவ்வித சாதிய பாகுபாடுமின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளின் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல், கிராம சபைக் கூட்டத்திலும் சாதிய பாகுபாடின்றி, தலைவர்கள், மக்கள் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், போதுமான காவல்துறையினர் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புகார்களை கையாள கைபேசி உதவி எண் (அல்லது) ஒரு அலுவலரை அறிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.