தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 24 ந் தேதி சென்னை வண்டலூரில் துவக்கி வைத்துள்ள 'பசுமை தமிழக இயக்கம்' திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 7 லட்சம் மரக்கன்றுகளும் அடுத்த ஆண்டு 20 லட்சம் மரக்கன்றுகளும் நடப்படும் என வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை அவர் நட்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று மட்டும் மாவட்டத்தில் நாலாயிரம் மரக்கன்றுகள் நடப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 2030க்குள் மாநிலத்தின் பசுமை பரப்பை 23.27 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 39 சதவிகிதமாக பசுமை பரப்பு உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வனத்தில் உள்ள வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சத்தியமங்கலம் சாலை விரிவாக்கத்தில் வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக பத்து மரக்கன்றுகள் நடப்படும். மரங்களை வேரோடு பிடுங்கி நடுவதில் முழு வெற்றி இல்லை அதனால் தான் வெட்டப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் தம் பகுதியில் இருந்த பூங்காவை அழித்ததாக செய்தி வந்தது. உண்மையில் அப்பகுதியில் சாக்கடை நீர் செல்ல வசதி இல்லை. அதற்காக நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி சார்பில் வெண்டிபாளையத்தில் அடர்வனம் திட்டம் துவக்கப்பட்டது. அதை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2016 க்கு முன்பு வாங்கப்பட்ட டிடிசிபி அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளிலும் உரிய அளவு சாலை மற்றும் பொது வசதிகள் ஏற்படுத்தி அரசிடம் அனுமதி பெற வேண்டும். டிடிசிபி அப்ரூவல் இல்லாத மனைகளை பதிவு செய்வதை தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு வெண்டிபாளையம் மற்றும் பெருந்துறை சாலையில் மேம்பாலம் கட்ட பரிசீலிக்கப்படும். ஈரோடு நகரில் தோல் தொழிற்சாலை மற்றும் சாய சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் குறித்து ஆய்வு நடைபெறும். கழிவுநீரை ஒரு இடத்திற்கு கொண்டு வந்து சுத்திகரிக்கலாமா அல்லது கலைஞர் ஆட்சியில் குறிப்பிட்டபடி கடலில் விடலாமா என்ற ஆய்வு நடக்கிறது. விதிகளுக்கு உட்பட்டு ஜல்லி குவாரிகள் செயல்பட வேண்டும். இல்லையென்றால் மூடப்படும். சோலாரில் விரைவில் புதிய பேருந்து நிலையம் செயல்படும்'' என்றார்.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகி இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ''அவர் விலகியது வருத்தத்துக்குரியது. இதுபற்றி பின்னர் தெளிவாக விளக்கம் அளிக்கிறேன்'' என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன சேர்மன் குறிஞ்சி என். சிவக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் ஆர்.சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.