200 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் சிதிலமடைந்ததால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து புதிதாக ஒரு பள்ளிவாசலைக் கட்டியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ளது பனங்குடி கிராமம். இந்தக் கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தக் கிராமத்தில் மத அடிப்படையில் எந்தச் சண்டையும் ஏற்பட்டதில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இவர்களின் வழிபாட்டு தலங்களான கோயில், சர்ச், பள்ளிவாசல் என மூன்றும் அடுத்தடுத்து அமைந்துள்ளது.
பனங்குடியில் உள்ள பள்ளிவாசல் 200 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. தற்போது அந்தப் பள்ளிவாசல் சிதிலமடைந்து காணப்படுவதால் அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் அதே இடத்தில் புதிதாகப் பள்ளிவாசல் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து புதிய பள்ளிவாசல் கட்ட ஜமாத் தலைவர் முன்னிலையில் பனங்குடி கிராமத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, இந்தக் கிராமத்தில் பெருவாரியாக உள்ள இந்து மக்கள், கிறிஸ்துவ மக்கள் பங்களிப்புடன் ரூ. 70 லட்சம் செலவில் பிரமாண்டமான புதிய முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் கட்டப்பட்டது.
இதையடுத்து, பள்ளிவாசல் திறப்பு விழாவில் கிராம மக்கள் தலைமையில் இந்துக் கோயிலில் வழிபாடு செய்ததோடு, சீர்வரிசைத் தட்டுக்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று, மதநல்லிணக்கம் போற்றும் வகையில் கிராம மக்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். மேலும், ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் கிராமத் திருவிழா போல் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் அனைவருக்கும் கந்தரி என்னும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் ஜமாத்தார்களும் ஐயப்ப பக்தர்களும் பள்ளிவாசலில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகள், மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.