தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இந்தி மொழி நிகழ்ச்சிகளின் அளவு அண்மைக்காலங்களில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டும், அப்பட்டமாகவும் குறைக்கப்பட்டு வருகின்றன. இது கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சாலைகளில் செல்பவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் உள்ள பொருட்களைப் பறித்துச் செல்வதைப் போன்று, தமிழ்நாட்டு மக்களை எந்தநேரமும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கும் சூழலுக்கு ஆளாக்கி விட்டு, அவர்கள் கவனம் முழுவதும் அதில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சென்னை, திருச்சி, தருமபுரி, நாகர்கோவில் வானொலி நிலையங்களில் வர்த்தக ஒலிபரப்பு என்பது கிட்டத்தட்ட இந்திமயமாக்கப்பட்டு விட்டது. வர்த்தக ஒலிபரப்பில் காலை முதல் மாலை வரை பெரும்பாலும் இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பப்படுகின்றன. உள்ளூர் நிகழ்ச்சித் தயாரிப்புகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, தில்லி நிகழ்ச்சிகள் மறு ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்ட நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டாலும் கூட அவற்றில் இந்தி விளம்பரங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது கூட இன ரீதியாகவும், மொழி சார்ந்தும் இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. ஆனால், தமிழர்களை அடிமைகளை விடக் கேவலமாக நடத்தும் மத்திய அரசு, தொடர்ந்து நமது உரிமைகளைப் பறிப்பது, நமக்கு உடன்பாடற்ற மொழி மற்றும் கலாச்சாரங்களைத் திணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது நாட்டின் ஒருமைப்பாடு, நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வு ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பதாகும்.
ஜனநாயகத்தின் அடிப்படையே மக்களின் விருப்பத்திலும், உரிமைகளிலும் குறுக்கீடு செய்யாமலிருப்பது தான். ஆனால், ஜனநாயகத்தை மதிக்காமல் தமிழ்நாட்டில் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது. இதைக் கைவிட்டு தமிழகத்திலுள்ள வானொலி நிலையங்களின் மூலம் தரமான தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப மத்திய அரசும், பிரசார் பாரதியும் முன்வர வேண்டும்.