தமிழக பள்ளி கல்வித்துறையில் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் சென்றுள்ள சுற்றறிக்கை கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் ஆன்லைன் மூலமாக புதிர் போட்டி நடைபெறுகிறது. இந்த புதிர் போட்டியில் கலந்துக்கொள்பவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு குழு, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டாவது குழு, ஒன்பதாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மூன்றாவது குழு.
இந்த போட்டியில் கலந்துக்கொள்ளுபவர்களுக்கு 3 தலைப்புகளில் புதிர் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தலைப்பு 1. காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, 2. காந்தியடிகள் மக்கள் பணிகள், 3. வாழ்க்கையோடு இணைந்த காந்தியடிகள் கருத்துக்கள் என்கிற தலைப்பில் கேட்கப்படுகின்றன. இந்த போட்டி அக்டோபர் 2ந்தேதி முதல் நவம்பர் 1ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
இதுப்பற்றி கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மத்தியரசின் கல்வி வாரியத்தின் சார்பாக கல்வித்துறையில் சில திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அப்படியொரு திட்டம் தான் சுமக்ர சிக்ஷா. இந்த திட்டத்தின் சார்பில் பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டி தருதல் உட்பட சில பணிகள் செய்து தரப்படுகின்றன. இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளனர்.
கடந்த மாதம் இறுதியில் மின்னஞ்சல் வழியாக இதுப்போன்ற புதிர் போட்டி நடத்தப்படவுள்ளதை மாணவ – மாணவிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தகவல் வந்தது. அந்த தகவலை தான் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது முழுக்க முழுக்க ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என தெரியவில்லை என்றார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, கல்வியில் மும்மொழி கொள்கையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டுகிறது. அதற்காக கல்வி சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதனையே பல கட்சிகளிலும், கல்வியாளர்களும் எதிர்த்து வருகின்றனர். அப்படியிருக்கும் நிலையில் இரட்டை மொழியில் ஒரு போட்டியை நடத்துகிறது. அதிலும் அந்தந்த மக்களின் தாய்மொழி இல்லாமல் பொதுமொழியான ஆங்கிலத்தோடு, இந்தி மொழியை திணிக்கிறார்கள். தமிழகத்தில் இந்தியை திணிக்கமாட்டோம், மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் எனச்சொல்லும் மத்திய ஆட்சியாளர்கள், ஒரு போட்டியை மாணவர்களுக்கு நடத்துகிறார்கள். அதிலேயே தமிழை புறக்கணித்துவிட்டு இந்தி, ஆங்கிலத்தில் நடத்துவது சரியில்லை என கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.