தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் 2022ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடராக நேற்று முன்தினம் (5ஆம் தேதி) ஆளுநரின் உரையுடன் துவங்கியது. கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலின் காரணமாக கூட்டத்தொடர் 7ஆம் தேதி வரை நடைபெறும் என அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன் படி இன்று இறுதி நாள் சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கியது. இன்று நடந்த வினா விடை நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதேபோல், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று பகல் 12.30 மணி அளவில் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவுற்றது. அவைத் தலைவர் அப்பாவு, தேதி குறிப்பிடாமல் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசிய சில முக்கிய அம்சங்கள்:
அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்படவில்லை.
அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு 10, 20 ஆண்டுகள் தண்டனையை கழித்தவர்கள், ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளிட்டோரை விதிகளின் படி விடுவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ் என 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண நிதி வர வில்லை என்றாலும் விவசாயிகள் நலன் காக்க மாநில அரசின் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுக்க 24,513 முகாம்கள் பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளது. போக்சோ வழங்குகளை விசாரிக்க சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,363 போக்ஸோ வழங்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 133 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.