சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை, சென்னையில் இருந்து வழிநடத்துகிறார்களா? அல்லது, ஆஸ்திரேலியாவில் இருந்து வழிநடத்துகின்றனரா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய போது, பொன். மாணிக்கவேல், தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, மனுதாரரின் உண்மைத் தன்மை குறித்தும் அவரது அடையாள அட்டை உண்மையா? எனவும் கேள்வி எழுப்பியது. பின்னர், அண்மைக்காலமாக போலி பத்திரிகையாளர்கள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், போலி பத்திரிக்கையாளர்கள் குறித்தும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய ஊழல் எதிர்ப்பு பத்திரிகை என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பு மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும். இது குறித்த விபரங்களைத் தாக்கல் செய்யக் கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சென்னை பிரஸ் கிளப்புக்கு 20 ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் பிரஸ் கிளப்பை கட்டுப்படுத்தி வருவதாகவும், போலி பத்திரிக்கையாளர்கள் பிரஸ் கிளப்புக்குள் நுழைந்து விட்டதாகவும் வழக்கறிஞர் சூரியபிரகாசம் குற்றம் சாட்டினார்.
அப்போது சென்னை பத்திரிகையாளர் மன்ற தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், சென்னை பத்திரிகையாளர் சங்கத்திற்கு கடந்த 1999-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் தேர்தல் தொடர்பான வழக்கு பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களை ஆய்வு செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும், தேர்தலை நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை இந்நீதிமன்றம் நியமிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறதா? அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படுகிறதா? சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் ஆண்டு வருமானம் என்ன? அதன் கணக்குகள் முறையாக உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
சென்னை பத்திரிக்கையாளர் சங்கம், மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட், மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் ஆகிய 3 சங்கங்களைத் தவிர பல லெட்டர் பேடு சங்கங்கள் தற்போது உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அதற்கான அங்கீகாரத்தை அரசு வழங்க கூடாது. இதுபோன்ற போலி பத்திரிக்கையாளர்கள் அதிகரிப்பதால் உண்மையான பத்திரிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்கள் ஏன் தற்போதும் சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கிறார்கள்? ஓய்வுபெற்ற நபர்களைக் கொண்டிருப்பதால் என்ன பயன்? ஓய்வுபெற்ற ஊடகவியலாளர்கள் சங்கங்களுக்கு ஆலோசனை வழங்கலாம், ஆனால் நிர்வாகத்தில் ஏன் ஈடுபட வேண்டும்? சென்னை பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்கள் பட்டியலில் சில பத்திரிக்கைகள் மற்றும் காட்சி ஊடகங்களைச் சார்ந்தவர்கள் உள்ளனர். பெரிய பத்திரிக்கைகள் இல்லாது என்? என கேள்வி எழுப்பினர்.
போலி பத்திரிக்கையாளர்கள் மூலமாக அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மிரட்டப்பட்டுவதாகவும், இவர்கள் தான் செய்திகளைத் திணிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். தற்போது பெண்கள்கூட, தொலைக்காட்சி தொடர்களைத் தவிர்த்துவிட்டு, செய்திகள் பார்ப்பதைச் சுட்டிக் காட்டிய நீதிபதி, காட்சி ஊடகங்களை முறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே எழுப்பிய கேள்விகளுக்கு பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.