
எதிர்காலத்தில், பருவம் தவறிய மழையால் விளைபொருட்கள் வீணாவதை தடுக்க, நேரடி கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்களை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த மழையில் விளைபொருட்கள் மழையில் நனைந்து வீணானது குறித்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை
விசாரணைக்கு எடுத்தது.
மேலும், அதிகளவில் சாகுபடி நடக்கும் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் துவங்குவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், நெல் கொள்முதலுக்காக 468 குடோன்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 3 லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லை பாதுக்காக்க முடியும். அவை படிப்படியாக மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று வேன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதுதவிர பல இடங்களுக்கு அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் பருவம் தவறி பெய்யும் மழையில் விளை பொருட்கள் வீணாகாமல் பாதுகாக்க நேரடி கொள்முதல் நிலையங்களில், நிரந்தர கட்டுமானங்கள் அமைப்பது குறித்து அரசு யோசிக்க வேண்டும் என ஆலோசனை கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.