போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் பங்கேற்காததால், அவர்களை வைத்து தமிழ்நாடு முழுக்க பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் அனைத்துப் பேருந்துகளும் இயங்க, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வில், ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்ற சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை முதல் வழக்காக எடுத்து விசாரித்தது.
இந்த விசாரணையின் போது, போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. பொங்கலின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மக்களே. அரசும், போக்குவரத்து தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பதிலளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதி மன்றம். அதேபோல், பொதுமக்களின் நலன் கருதி இந்தப் போராட்டத்தை இந்த மாதத்தின் பிற்பகுதியில் தள்ளி வைக்க முடியுமா எனும் விளக்கத்தை போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.