Skip to main content

கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021
High Court dismisses Karthi Chidambaram case

 

வருமான வரி மறுமதிப்பீட்டிற்காக அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேஷன் என்ற நிறுவனத்துக்கு  விற்பனை செய்துள்ளனர்.

 

சந்தை மதிப்பின்படி ஏக்கர் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயைக் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2014-15, 2015-16ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை மறுமதிப்பீடு செய்வது தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வருமான வரித்துறை, வருமான வரிக் கணக்குகளுக்கான மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் துவங்காத நிலையில், வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது எனவும், வருமான வரித்துறை நோட்டீசில் தலையிட முடியாது எனவும் கூறி, மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், சட்டப்படி மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் வருமான வரித்துறை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்