கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்குப் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தனித்தனியாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று (05.09.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி வாதிடுகையில், “உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வள்ளலாரின் சத்தியஞான சபைக்குத் தானமாக வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள 27.86 ஏக்கர் நிலங்களைக் கண்டறிய 10 அதிகாரிகள் அடங்கிய குழுவைக் கடலூர் மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளார்” எனத் தெரிவித்து அதற்கான உத்தரவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள், “34 ஏக்கர் நிலமும் தனி நபர்கள் பெயருக்குப் பட்டா வழங்கியிருந்தால், அது சட்டவிரோதம்” எனத் தெரிவித்தனர்.
மேலும், “இந்நிலங்கள் 1975ம் ஆண்டுக்குப் பின் யார் பெயரில் உள்ளது?. தற்போது யாரிடம் உள்ளது என்பதைக் கண்டறிந்து, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். அதோடு, “27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண மாவட்ட ஆட்சியர் அமைத்த குழுவில் குழுவில் சம்பந்தப்பட்ட பதிவாளர்களையும் சேர்க்க உத்தரவிடப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், “சர்வதேச மையம் அமைக்கத் தோண்டப்பட்ட குழிகள் காரணமாக அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கவும், காலி நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கவும் நிலத்தில் வேலி அமைக்க அனுமதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.