சுற்றுச்சூழல் அனுமதியின்றிக் கட்டுமானங்கள் மேற்கொண்டதாக, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் அளிக்குமாறு ஈஷா அறக்கட்டளை மையத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு எதிராக ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கல்வி பயன்பாட்டிற்கான கட்டடங்கள் என்பதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு பெற உரிமை உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான 2014- ஆம் ஆண்டின் அறிவிப்பாணையின்படி, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக ஏற்கனவே புகார் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பாணையை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியுமா என விளக்கமளிக்கும் படி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு தடை விதித்துள்ளது.